Sunday, January 23, 2011

சர்க்கரைப்  பொங்கல் 

தேவையான பொருட்கள்

பச்சரிசி                                         - 1 டம்பளர்
பயற்றம் (பாசி) பருப்பு              - கைபிடியால் 1 பிடி
முந்திரி பருப்பு                             - 50 கிராம்
ஏலக்காய்                                       -ஐந்தாறு
நெய்                                                  - 1/4 கிலோ 
திராட்சை பழம்                            - 50  கிராம் 
தேங்காய்                                       -  தேவையான அளவு
             முதலில் நெய்காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். 
              பாசி பருப்பை வாணலியில் போட்டு சிவப்பாக  வறுத்து அரிசியில் போட்டு இரண்டு மூன்று தரம் அரிசியை அலம்பி விட்டு பின் 4 டம்பளர் தண்ணீர் விட்டு அதனை குக்கரில் வைத்து மூடி விட வேண்டும்.  சாதம் வேக வைப்பது போலவே 7 அல்லது 8 விசில் சத்தம் வந்ததும் இறக்கி விட்டு கொஞ்சம் நேரம் கழித்து சாதத்தை எடுத்து அதில் வெல்லத்தை தட்டி போட வேண்டும்.  1 உருண்டை ( 1/4 கிலோ அல்லது 1/2 கிலோ) நல்ல சிவப்பு வெல்லமாக பார்த்து வாங்க வேண்டும்.  பின் அடுப்பில் சாதம் வெல்லம் சேர்த்து பார்த்திரத்தில் வைத்து கிளறி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  1 டம்பளர் காய்ச்சிய பால் விட வேண்டும்.  அடுப்பை சின்னதாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பொங்கல் கெட்டியாக வந்தவுடன் நெய் விட்டு கிளற வேண்டும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பையும், காய்ந்த திராட்சை பழத்தையும் வறுத்து போட வேண்டும்.  ஏலக்காய் பொடித்து போட வேண்டும்.  தேங்காய் பல்லு பல்லாக கீறிபோடலாம்.
ரவைப் பொங்கல் 

தேவையான பொருட்கள்

ரவை                                            - 1/2 கிலோ
பயற்றம் (பாசி) பருப்பு              - 200 கிராம்
முந்திரி பருப்பு                             - 50 கிராம்
மிளகு                                               - 1 ஸ்பூன்
சீரகம்                                                - 1 ஸ்பூன்
உப்பு                                                  - தேவையான அளவு
நெய்                                                  - தேவையான அளவு
இஞ்சி                                               - சிறு துண்டு 
கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, கறிவேப்பில்லை ஒரு கொத்து.
                        பாசி பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து கொள்ள வேண்டும்.  ஒரு வாணலியில் நெய் ஊற்ற வேண்டும். நெய் காய்ந்ததும், மிளகு சீரகத்தைப் போடவேண்டும். வெடித்ததும் முந்திரிப் பருப்பைப் போட வேண்டும்.  பிறகு மெல்லியதாகச் சீவிய இஞ்சித் துண்டுகளைப் போட வேண்டும்.  கறிவேப்பில்லையை போட்டு 3 டம்பளர் தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விட வேண்டும்.
(1 டம்பளர் ரவை எடுத்தால் 3 டம்பளர் தண்ணீர் விட வேண்டும்)

தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், ரவையைக் கொட்டிக் கட்டிவிடாமல் கிளறி விட வேண்டும். 
ரவை நன்றாக வெந்ததும், பாசிபருப்பை போட்டுக் கிளறி, எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு இறக்கி விட வேண்டும்.

Wednesday, January 19, 2011

வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி                                           - 1/2 கிலோ
பயற்றம் (பாசி) பருப்பு              - 200 கிராம்
முந்திரி பருப்பு                             - 100 கிராம்
மிளகு                                               - 1 ஸ்பூன்
சீரகம்                                                - 1 ஸ்பூன்
உப்பு                                                  - தேவையான அளவு
நெய்                                                  - தேவையான அளவு
இஞ்சி                                               - சிறு துண்டு
                        பாசி பருப்பை இரும்புசட்டியில் போட்டு சிவப்பாக வறுத்து அரிசியுடன் கலந்து நன்றாக அரிசியையும் பருப்பையும் கல் அரித்து இரண்டு மூன்று தரம் அலம்பிவிட்டு பாத்திரத்தில் போட்டு 6 டம்பளர் தண்ணீர் விட்டு (1 டம்பளர் அரிசி எடுத்தால் 3 டம்பளர் தண்ணீர் விட வேண்டும்.  பெருங்காயம், உப்பு, இஞ்சி, எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் வைக்கவேண்டும்.  
3 அல்லது 4 விசில் வந்தவுடன் இறக்கி வைத்து விடவேண்டும்.  ஒரு வாணலியில் நெய் ஊற்ற வேண்டும். நெய் காய்ந்ததும், மிளகை போடவேண்டும்.
மிளகு வெடிக்க தொடங்கியதும், சீரகத்தை போட்டு, உடனேயே முந்திரி பருப்பையும் சிறிதளவு கறிவேப்பிலையையும் போட வேண்டும்.
முந்திரி பருப்பு சிவந்ததும் இறக்கி பொங்கலில் ஊற்றி, நன்றாக கிளறி கொடுக்கவேண்டும்.

Saturday, January 15, 2011

சாத வகைகள்

கோதுமை சாதம்




கோதுமையில் சம்பா கோதுமை என ஒரு வகை உண்டு. அந்த கோதுமையைகொண்டு சாதம் சமைக்கலாம்.

சம்பா கோதுமையை ஒன்று இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும்.

அரிசி சாதம் தயார் செய்வது போலவே, கோதுமையை குக்கரில் சமைக்கவேண்டியதுதான். 1 டம்பளர் அரிசி எடுத்தால் 2 1/2 டம்பளர் தண்ணீர் விடவேண்டும். இரண்டு அல்லது மூன்று விசில் வந்ததும் இறக்கி விடவேண்டும்.

கோதுமை சாதம் நல்ல சத்துணவாகும்.

நோய்வாய்ப்பட்டு தேறியவர்களுக்கு உடல் ஊட்டம் பெற செய்ய கோதுமைசாதம் கொடுக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கும், இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்களுக்கும், கோதுமை சாதம் மிகச் சிறந்த உணவாகும்.